”ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கம், அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வினை வழங்க வேண்டும்” என இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவர் என்ரூ பெட்ரிக் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”பிரித்தானியா, பல வருடங்களாக அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகின்றது.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய அமர்வு நடைபெறவுள்ள நிலையில், இதில் இணை அனுசரணை நாடுகள் எவ்வாறான முடிவை எடுத்துள்ளது என்று தற்போது கூற முடியாது.
எனினும், இலங்கையில் தற்போது தேர்தல் காலம் என்பதால் தேர்தலின் பின்னர் இந்த விடயத்தில் செயற்படுவதற்குப் புதிய கதவுகள் திறக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட வேண்டும் ” இவ்வாறு பிரித்தானியாவின் தூதுவர் என்ரூ பெட்ரிக் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் இரண்டாவது ஏற்றுமதி வர்த்தக பங்காளராக தொடர்ந்தும் பிரித்தானியா இருந்து வருகின்றது எனவும், சுற்றுலாத்துறையிலும் இலங்கையில் இரண்டாவது இடத்தைப் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் பெறுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.















