ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டிலுள்ள செல்வந்தர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதுடன், நாட்டிலுள்ள சாதாரண மக்கள் மீதே அதிக வரிசுமைகளை சுமத்தியிருந்தாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
வெலிமடை நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ ஜக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் சகல விவசாயிகளும் பாதுகாக்கப்படுவார்கள். வெலிமடை பகுதியிலுள்ள கிழங்கு செய்கையாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உர மானியங்களை வழங்கி, நாட்டின் மொத்த கேள்வியை, பூர்த்தி செய்யும் அளவுக்கு விவசாயிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதிக்கு கிழங்கு செய்கையாளர்களின் நாடி துடிப்பு தெரியாது. எனினும், அவர் அனுரகுமார திசாநாயக்கவின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து வைத்துள்ளார். உள்நாட்டில் கிழங்குகளை அறுவடை செய்யும்போது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
பசுமை திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சலுகைகள் வழங்கப்படும். 50 கிலோகிராம் உர மூடைகளை 5,000 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரணில் மற்றும் அனுரவினால் இதுபோன்ற சலுகைகளை வழங்க முடியாது.
அவர்களால் செல்வந்தர்களின் கடன்களை தள்ளுபடி செய்து, சாதாரண மக்கள் மீது வரிசுமைகளை சுமத்த மட்டுமே முடியும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியில் ஒவ்வொரு விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான விசேட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.