யாழ்ப்பாணத்தில் தாம் கூறிய கருத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திரிபுபடுத்திக் கூறியமைக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
நான் தமிழர்களை அச்சுறுத்துவதாகவும் அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டுமெனவும் பிரசாரம் செய்துள்ளார்.
இவ்வாறான அரசியல் நடவடிக்கைகள் மூலம் ரணில் விக்ரமசிங்க இனவாதத்தைத் தூண்டுவதற்கு முனைந்துள்ளார். நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்கனவே தகுந்த பதிலை தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் சரியான பதிலை ஏற்கனவே வழங்கியுள்ளதால் நான் ரணில்விக்கிரமசிங்கவிற்கு பதிலளிக்கவேண்டியதில்லை. நாட்டில் இனவாத பிரசாரங்களை முன்வைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரணில் விக்ரமசிங்க அண்மைக்காலமாக என்னைத் தோழர் எனக் குறிப்பிட்டு வருகின்றார். இவ்வாறு நட்பு பாராட்டுவதன் மூலம் ஒருபோதும் அவரின் தவறுகளை மூடிமறைக்க முடியாது.
மேலும், மத்திய வங்கி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்படும். மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஆராயப்படும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.