இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொருளாதார வேலைத்திட்டத்தின் அடுத்த மீளாய்வு நடத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூலி கோசாக் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மக்களே தீர்மானிக்க வேண்டும்.
தேர்தலுக்கு பின்னர் புதிய அரசாங்கம் அமைந்தவுடன், இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் அடுத்த மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெறும்.
இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தற்போதைய வேலைத்திட்டத்தின் நோக்கங்களை அடைவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
அத்துடன், இலங்கையின் முன்னேற்றத்தை காட்டிய அவர், இன்னும் சவால்கள் உள்ளதாகவும், சமீபத்திய பொருளாதார திட்டங்களை பாதுகாப்பது இன்றியமையாதது என்றும் எச்சரித்தார்.
மேலும், இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் பற்றிய புதிய தகவல்களையும் வழங்கிய ஜூலி கோசாக், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் சீனாவின் எக்சிம் வங்கி உட்பட முக்கிய கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தங்கள் போன்ற மைல்கற்களை சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும். நாடு நெருக்கடியில் இருந்து நாடு முழுமையாக வெளிவர உதவும் வகையில் பொருளாதாரத் திட்டம் பாதையில் IMF உள்ளதாகவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.