இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று (23) பதவியேற்க உள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
1966 நவம்பர் 24 ஆம் திகதி பிறந்த அனுரகுமார திஸாநாயக்க, தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார்.
அதன் பின்னர் தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் பிரவேசித்து விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவில் கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகக் கல்விக்குத் தகுதி பெற்றார்.
1992 ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் நுழைந்த அனுரகுமார திஸாநாயக்க, 1995 ஆம் ஆண்டு இளங்கலை விஞ்ஞானப் பட்டத்துடன் பட்டம் பெற்றார்.
1987 இல், அப்போதைய அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான பாரிய பொதுப் போராட்டங்களில் மாணவர் செயற்பாட்டாளராகப் பங்களிப்பதோடு சோசலிச மாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டார்.
1993 இல் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) அரசாங்கத்தின் பாரிய அடக்குமுறைக்கு உள்ளாகி மீண்டு வந்த போது தீவிர அரசியலுக்கு வந்த அனுரகுமார திஸாநாயக்க 1997 இல் சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளராக பதவி வகித்தார்.
1997 இல் ஜனதா விமுக்தி பெரமுனாவின் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1998 இல் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவில் இணைந்தார்.
1999 மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம வேட்பாளராக மத்திய மாகாண சபைக்கு போட்டியிட்டு முதல் தடவையாக அரசியலில் பிரவேசித்தார்.
2000 பாராளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியலில் போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க முதன்முறையாக எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டார்.
2004 இல் குருணாகல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவான இவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சராக கடமையாற்றினார்.
2008 ஆம் ஆண்டு ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க, 2010 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் உறுப்பினராக மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.
2014 பெப்ரவரி 2 மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரானார் மற்றும் 2015 இல் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டில், மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து தேசிய மக்கள் படை என்ற புதிய அரசியல் இயக்கம் உருவாக்கப்பட்டது.
2019 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் படை வேட்பாளராகப் போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 3.16 வீத வாக்குகளைப் பெற்றார்.
அதன் பின்னரான பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.