கருணைக் கொலை செய்வதற்காக உருவாக்கப்பட்ட சர்கோ பாட் எனும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 64 வயதுடைய அமெரிக்க பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து – ஜெர்மனி எல்லைக்கு அருகில் ஒரு வனப்பகுதியில் உள்ள தி லாஸ்ட் ரிசார்ட் என்ற பெயர் கொண்ட ரிசார்ட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காப்ஸ்யூல் வடிவில் இருக்கும் குறித்த சர்கோ பாட் இயந்திரத்துக்குள் நுழைந்து உள்ளே இருக்கும் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து நைட்ரஜன் வாயு வெளியாகும் எனவும் இதனால் ஆக்ஸிஜனைக் குறைத்து உள்ளே இருப்பவர் சில நிமிடங்களிலேயே உயிரிழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கப் பெண் ஒருவர் தற்கொலைக் காப்ஸ்யூலில் உயிரிழந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் பலருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது.
மிட்வெஸ்ட்டைச் சேர்ந்த குறித்த பெண் கடுமையான நோயெதிர்ப்பு பிரச்சினையால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் தற்கொலை சாதனத்தில் பிறரின் உதவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் பின்னணியில், சுவிஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (24) நான்கு பேரை கைது செய்தனர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஷாஃப்ஹவுசனில் உள்ள பொலிஸார் அறிக்கையில்,
ஷாஃப்ஹவுசன் மாகாணத்தின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் உதவி செய்ததற்காக பல நபர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
மேலும் பல நபர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட ஒரு மணி நேரத்திற்குள் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காப்ஸ்யூல் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் உடல் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான நபர்களின் அடையாளங்களை பொலிஸார் வெளியிடவில்லை.