மதுரையில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான செய்திகளை அடுத்து விமானம் நேற்றிரவு (15) சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
தமிழகத்தின் மதுரையில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற ஏ.எக்ஸ்.பி.684 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.
இது தொடர்பில் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் எங் ஹென் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
மின்னஞ்சல் மூலமாக இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.
இதனால், எங்களுடைய விமான படையை சேர்ந்த எப்-15எஸ்.ஜி. போர் விமானங்கள் இரண்டு, பாதுகாப்புக்காக அந்த விமானத்துடன் சென்றன.
அந்த விமானம் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக இன்றிரவு (நேற்றிரவு) 10.00 மணியளவில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
அதையடுத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினார்.
இதேவேளை, விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை இன்றும் வெளியிடப்படவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உடனடி அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
செவ்வாய்க்கிழமை (14) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஏழு இந்திய விமானங்களில் மதுரையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் அடங்கும்.
டெல்லி-சிகாகோ ஏர் இந்தியா விமானம், ஜெய்ப்பூர்-பெங்களூரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தம்மம்-லக்னோ இண்டிகோ விமானம், தர்பங்கா-மும்பை ஸ்பைஸ்ஜெட் விமானம், சிலிகுரி-பெங்களூரு ஆகாசா ஏர் விமானம் மற்றும் அலையன்ஸ் ஏர் அமிர்தசரஸ்-டேராடூன்-டெல்லி விமானம் ஆகியவை ஏனைய விமானங்கள் ஆகும்.