ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த மாநாட்டுக்கு வருகை தருமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவரது அழைப்பை ஏற்று, பிரதமர் மோடிக்கு பதிலாக ஜெய்சங்கர் மாநாட்டிறகு வருகை தந்துள்ளார்.
காஷ்மீர் பிரச்னை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு காணப்பட்டு வரும் நிலையில் குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தார்.
இந்த உச்சிமாநாட்டில் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், பெலாரஸ், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை கடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.