அறுகம்பபை வளைகுடா பகுதியில் தாக்குதல் அச்சுறுத்தல் திட்டம் தொடர்பில் கைதான மூன்று சந்தேக நபர்களையும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான உத்தரவுகளையும் பொலிஸார் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், மற்றைய நபர் கொழும்பு பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
தெஹிவளையில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகத்தை சுற்றியுள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
இவ்வாறு கைதானவர் 21 வயதுடைய மாவனெல்ல – கிரிந்ததெனிய பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த நாட்டில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.