காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள், 1 சுயேட்சைக் குழு என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 48 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதற்கு 55,643 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
இதேவேளை எல்பிட்டிய தேர்தல் தொகுதியை அண்மித்த பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசமைப்பின் பிரகாரம் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இன்னிலையில் ஜனாதிபதித் தேர்தலை நிறைவு செய்ததன் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கடந்த மாதம் வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் காலி மாவட்டம், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது.
குறித்த தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 14 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது.
மேலும் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.