நிதி மற்றும் கொள்வனவு அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”
ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையிலான செலவுகள், கடன் சேவை, கடன் மறுசீரமைப்பு தொடர்பான இடைக்கால நிலையான கணக்கை தயாரிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று பிற்பகல் இடம்பெற்ற நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இந்த இடைக்கால கணக்கு அறிக்கை தொடர்பான விவாதம் நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.