இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் உண்டான திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தனர்.
மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையினால் நான்கு வெவ்வேறு மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் பேரிடர் நிறுவனம் கூறியுள்ளது.
மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி செல்லும் வீதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து ஒரு பாறையின் அடிவாரத்தில் குறைந்தது ஐந்து கார்கள், ஒரு பஸ் மற்றும் ஒரு டிரக் வாகனங்கள் சிக்கியுள்ளன.
வெள்ளிக்கிழமை (29) அன்று, பொலிஸார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சேற்றில் புதையுண்ட வாகனங்கள் மற்றும் அதில் பயணித்தவர்களை மீட்கும் பணிகளில் கவனம் செலுத்தினர்.
இந்த அனர்த்தங்கள் காரணமாக மேலும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவல் உள்ள தீவுகள் வருடாந்தம் ஒக்டோபர் முதல் மார்ச் வரை பருவகால மழையால் வெள்ளம், நிலச்சரிவுகளால் அடிக்கடி பாதிக்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.