எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்தில் உள்ள விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு அந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது“ யாழ் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ் போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.
எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது.
அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.
மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது ” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.