இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) காலை பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு சென்றுள்ளார்.
பீகாரைச் சென்றடைந்த ஜனாதிபதியை, கயா விமான நிலையத்தில் வைத்து மூத்த அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
அத்துடன், புத்த கயாவின் மகாபோதி ஆலய வளாகத்திற்குள் சென்ற ஜனாதிபதியை அநுரவை பௌத்த பிக்குகள் அன்புடன் வரவேற்றனர்.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் விளங்கும் மகாபோதி கோயில், புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் இடத்தைக் குறிக்கும் வகையில், புத்த கயாவில் உள்ள ஒரு பழங்கால புத்த கோவில் இதுவாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே வலுவான பங்காளித்துவத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது என்று திங்கட்கிழமை விசேட மாநாட்டில் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
அநுரகுமார பதவியேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் பன்முக உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் வலியுறுத்தினார்.
இந்த விஜயத்தின் நோக்கம் இரு நாடுகளிடையிலான வலுவான பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதையும் அதன் எல்லைகளை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தியதாக வெளிவிவகார செயலாளர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக திங்கட்கிழமை, இலங்கைத் தூதுக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
இது குறித்து எக்ஸில் பதிவிட்ட ஜனாதிபதி அநுரகுமார,
ஜனாதிபதியாக எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தது ஒரு பாக்கியம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளித்ததற்காகவும் கடன் மறுசீரமைப்பிற்கு உதவுவதற்காகவும். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, BRICS, UNCLCS மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தலை நிறுத்துவது குறித்து இன்றைய சந்திப்பின் போது விவாதித்தோம்.
நான் பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன், மேலும் இலங்கையின் பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இந்தியாவுக்கு உறுதியளித்தேன் என்று குறிப்பிட்டார்.
டிசம்பர் 15 முதல் 17 வரை மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
செப்டம்பரில் பதவியேற்ற பின்னர் அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.