ஹாமில்டனில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து செவ்வாய்க்கிழமை 423 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் நியூஸிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில் சவுதி நீண்ட கிரிக்கெட் வடிவத்தில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
இந் நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று, இங்கிலாந்தை வெறும் 234 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ததால், தனது டெஸ்ட் வாழ்க்கையை வெற்றியுடன் நிறைவுக்கு கொண்டு வந்தார் டிம் சவுதி.
தொடக்க இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இங்கிலாந்து ஏற்கனவே கைப்பற்றியிருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்தின் வெற்றியானது அண்மைய ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நான்காவது இடத்தை பிடிக்க வழமையமைத்தது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிப் போட்டிகளை முடித்துவிட்டதுடன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இருந்து வெளியேறியுள்ளன.
தற்சமயம் தரவரிசையில் இங்கிலாந்து ஆறாவது இடத்திலும், நியூஸிலாந்து நான்காவது இடத்திலும் உள்ளன.
தென்னாப்பிரிக்காவுடான தோல்வியின் பின்னர் இலங்கை ஐந்தாவது இடத்துக்கு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.