இரணைமடுச்சந்தி, கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால், 26 வயதுடைய இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாப்பிகைக் குளம் முன்பாக நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் புண்ணாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி, அழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழமை போன்று குறித்த யுவதி தனது வீட்டிற்கு திரும்பும் வேளை வான் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் அவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.