பசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள் வனுவாடுவில் (Vanuatu) செவ்வாயன்று (17) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
தேடல் குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைக் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுவதுடன், காயங்களுக்குள்ளான 200 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே இரவில் வனுவாடுவில் ஏற்பட்ட 7.3 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து வீழ்ந்தன.
நிலநடுக்கம் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தூதரகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், நாட்டின் மின்சாரம் மற்றும் மொபைல் சேவைகளையும் முடக்கியது.
தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, ஏழு நாள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வனுவாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதிவான உயிரிழப்புகளில் நான்கு பேர் தலைநகர் போர்ட் விலாவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆறு பேர் நிலச்சரிவில் இருந்தும், நான்கு பேர் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்தும் உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மோசமான விளைவுகளால் சுமார் 116,000 பேர் பாதிக்கப்படுள்ளதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அண்டை நாடான அவுஸ்திரேலியா, தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவ குழுக்களை அனுப்பும் என்று அந் நாட்டு துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் புதன்கிழமை (18) ஏபிசி செய்தியிடம் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அந் நாட்டு 12:47 மணிக்கு (01:47 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கையையும் தூண்டியது.
தென் பசுபிக் பகுதியில் சுமார் 80 தீவுகளின் தாழ்வான தீவுக்கூட்டமான வனுவாடு, பிஜிக்கு மேற்கேயும், வடக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் கிழக்கேயும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.