இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, இவர்கள் நேற்றிரவு (17) 10.00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 மூலமாக அவர்கள் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 15 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டார்.
இந்தச் சுற்றுப் பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கு இடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஸ்ரீ ஜக்தீப் தன்கர், (Vice President Of India Shri Jagdeep Dhankhar), இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் (Dr.S.Jayashankar – Minister of External Affairs of India), இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நந்தா (J.P. Nanda – Minister of Health), இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் (Shri Ajith Doval – National Security Advisor of India) உள்ளிட்ட இராஜதந்திரிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது, இருநாடுகளுக்கும் இடையில் முதலீடு, வணிகம், பாதுகாப்பு தொடர்புகளை பலப்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தன.
இதையடுத்து நேற்யை தினம் புத்த காயாவிற்கான பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, உள்ளிட்ட குழுவினர் அங்கு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.