தமிழ் நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மூன்று மீனவர்களும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
தமிழ் நாட்டின் நாகை மாவட்டம், அக்கரை பேட்டை எனும் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது 2 படகுகளில் வருகைத் தந்த 6 இனந்தெரியாத சந்தேகநபர்கள், குறித்த 3 மீனவர்களை கூரிய ஆயுதங்களினால் தாக்கி, படகில் இருந்த மீன்கள், மீன்பிடி உபகரணங்களையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்களே காயமடைந்துள்ளனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்கள் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் ஒரு மீனவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவமானது இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக இரண்டு நாட்டு பாதுகாப்புத் துறையினரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.