வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு இராணுவ பலத்தை பயன்படுத்துவதை நிராகரிக்க மறுத்துள்ளார்.
அதேநேரம், கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற்றுவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவதாகவும் அச்சுறுத்தினார்.
எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ட்ரம்ப், செவ்வாய்க்கிழமை (07) புளோரிடாவில் உள்ள Mar-a-Lago ரிசார்ட்டில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போது இதனைக் கூறினார்.
மெக்சிகோ வளைகுடாவை “அமெரிக்கா வளைகுடா” என்று மறுபெயரிடுவதாகவும் இதன்போது அவர் உறுதியளித்தார்.
கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக்கும் திட்டம்
2024 நவம்பர் 5 தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்ததில் இருந்தே, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற்றும் யோசனையில் மூழ்கியுள்ளார்.
அவர் பல சமூக ஊடக இடுகைகளில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சில பதிவுகளில், திங்களன்று இராஜினாமா செய்த பிரதமரை “கவர்னர் ட்ரூடோ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாயன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், கனடாவை அமெரிக்காவிற்குள் உள்வாங்குவதற்கான தனது யோசனையை நிறைவேற்ற இராணுவ நடவடிக்கையைப் பயன்படுத்துவீர்களா என்று ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், கனடா மற்றும் அமெரிக்காவை ஒன்றாக இணைக்க “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவதை பரிசீலிப்பதாக கூறினார்.
அத்துடன், கனேடிய பொருட்களுக்கான அமெரிக்க செலவுகள் மற்றும் நாட்டிற்கான இராணுவ ஆதரவையும் ட்ரம்ப் இதன்போது குறை கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பரில், ட்ரம்ப் பதவியேற்றவுடன் இரு அண்டை நாடுகளும் அமெரிக்காவுக்குள் குடியேறும் மற்றும் போதைப்பொருள் ஓட்டத்தை நிவர்த்தி செய்யாவிட்டால் கனேடிய மற்றும் மெக்சிகன் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ட்ரம்பின் கருத்துக்கு கனடா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கனடாவின் வெளி விவகார அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், “அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்பின் கருத்துக்கள் கனடாவை ஒரு வலுவான நாடாக மாற்றுவது பற்றிய முழுமையான புரிதல் இல்லாததைக் காட்டுகிறது.
நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது. எங்கள் மக்கள் வலிமையானவர்கள். அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றார்.
அதேபோல் ட்ரூடோ கூறும்போது, “அமெரிக்காவுடன் கனடா இணைவதற்கு வாய்ப்பே இல்லை” என்றார்
கிரீன்லாந்தின் பனாமா கால்வாய் கையகப்படுத்தும் முயற்சி
செவ்வாயன்று ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், பனாமா கால்வாயை மீட்டெடுப்பது மற்றும் டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது குறித்தும் பேசினார்.
மேலும் தனது விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்த இராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் நிராகரிக்க மறுத்து விட்டார்.
மத்திய அமெரிக்க வர்த்தகப் பாதை மற்றும் டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்டுப்பாட்டைப் பெற முயற்சிக்கும்போது, இராணுவ அல்லது பொருளாதார வற்புறுத்தலைப் பயன்படுத்த மட்டோம் என்று உலகிற்கு உறுதியளிக்க முடியுமா என்று ஊடகவியலாளர்கள் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “இல்லை, என்னால் அது தொடர்பில் உறுதியளிக்க முடியாது.
பனாமா கால்வாய் எங்கள் இராணுவத்திற்காகக் நிர்மாணிக்கப்பட்டது என்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து, ட்ரம்ப் பனாமா கால்வாயை இணைக்கும் தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் கடந்த மாதம் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரையும் சாடிப் பேசிய அவர், ஜிம்மி கார்ட்டர் மேற்கொண்ட ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 51 மைல் நீர்வழியின் முழு கட்டுப்பாட்டையும் பனாமாவுக்கு வழங்கியதாக கூறினார்.
மேலும், கிரீன்லாந்தை வாங்குவதற்கான தனது விருப்பத்தை டென்மார்க் எதிர்த்தால், அது “அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது” என்றும் ட்ரம்ப் கூறினார்.
இதற்கு பதிலளித்த டென்மார்க், கிரீன்லாந்து “விற்பனைக்கு இல்லை” என்று கூறியது.
“நாங்கள் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளாக இருக்கும்போது நிதி ரீதியாக ஒருவருக்கொருவர் சண்டையிட இது ஒரு நல்ல வழி அல்ல” என்று டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் செவ்வாய் இரவு கூறினார்.
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்கா வளைகுடா என பெயர் மாற்றும் திட்டம்
அதே செய்தியாளர் கூட்டத்தில், ட்ரம்ப் தனது நிர்வாகம் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை “அமெரிக்கா வளைகுடா” என்று மாற்ற முயற்சிப்பதாக அறிவித்தார்.
“மெக்ஸிகோ வளைகுடாவின் பெயரை அழகான வளையத்தைக் கொண்ட அமெரிக்க வளைகுடா என்று மாற்றப் போகிறோம். இது நிறைய பிரதேசங்களை உள்ளடக்கியது. அமெரிக்கா வளைகுடா! என்ன அழகான பெயர். அது பொருத்தமானது” என்று அவர் கூறினார்.
பெட்ரோலியம் நிறைந்த மெக்ஸிகோ வளைகுடா நீர்நிலை உலகின் ஒன்பதாவது பெரியதாகும்.
மேலும் 1500 ஆம் ஆண்டுகளில் இருந்து அது மெக்ஸிகோ வளைகுடா என வரைபடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மெக்சிகோ வளைகுடாவை மறுபெயரிடுவதற்கான ட்ரம்பின் வாக்குறுதியானது, வட அமெரிக்காவின் மிக உயரமான மலை சிகரமான தெனாலியின் பெயரை மவுண்ட் மெக்கின்லி என மாற்றுவதற்கான அவரது முந்தைய சபதத்தையும் எதிரொலித்தது.
பூர்வீக அமெரிக்கர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அலாஸ்கன் மலையின் பெயரை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மாற்றினார்.
பணயக்கைதிகள் விடயத்தில் ஹமாஸுக்கு எச்சரிக்கை
2023 ஒக்டோபரில் இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்த போது சிறைபிடித்த அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், தான் வெள்ளை மாளிகைக்கு திரும்பும் நேரத்தில், “மத்திய கிழக்கில் அனைத்தும் மோதல்கள் வெடிக்கும்” என்ற தனது அச்சுறுத்தலை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் ஊடகவியலாளர் சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தினார்.
அத்துடன் இது ஹமாஸுக்கும், வெளிப்படையாக யாருக்கும் நல்லதாக அமையாது என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலின் போது, சுமார் 250 பணயக்கைதிகள் காஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்களில் 96 பேர் எஞ்சியுள்ளனர். இதில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
நேட்டோ செலவு
நேட்டோ உறுப்பினர்கள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்பிற்காக செலவிட வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார், இது தற்போதைய 2 சதவீத இலக்கில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு.
பதவியேற்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி, பெரும்பாலான நேட்டோ உறுப்பினர்கள் தங்கள் நியாயமான பங்கை செலுத்தவில்லை என்று அடிக்கடி முறைப்பாடு அளித்தார்.
மேலும் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு பங்களிப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினார்.