தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் இருவர் மீது பருத்தித்துறை பகுதியில் மர்ம நபர்களினால் நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:- நேற்றைய தினம் (15) பிற்பகல் 3:00 மணியளவில் தொலைபேசி மூலம் பருத்தித்துறை- கொட்டடியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு தொடர்பெடுத்த நபர் ஒருவர் நீ தானே NPP அமைப்பாளர், கரையோரப் பகுதிகளுகளில் தேசிய மக்கள் சக்திக்காக வேலை செய்கிறாய்? உங்களது இடத்திற்கு வாள்வெட்டுக் குழுவென்று வருகின்றது .பார்த்துக்கொள்!” என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு சுமார் பத்து நிமிடத்தில் கொட்டடி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த வாள்வெட்டுக் குழுவொன்று அங்கிருந்தவர்களை துரத்தித் துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இத் தாக்குதலில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரின் சகோதரன் உட்பட இருவர் வாள்வெட்டு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் தே.ம.சக்தியின் பா.உ க.இளங்குமரன் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு விடயங்களை ஆராந்து பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் சென்று பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்களை கை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.