முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தென்கொரியாவில் விவசாய மற்றும் மீன்பிடித் தொழில்துறைகளுக்காக பணியாளர்களை அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் முன்பிணைக்கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு நேற்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கத் தயார் என அவரது சட்டத்தரணிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் எழுத்து மூலம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.