மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் புதன்கிழமை (22) மாலை ரயிலில் மோதி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் சுமார் 7 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரயிலில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீவிபத்தால் பதற்றமடைந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் பயணிகள், ரயிலில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.
இதன்போது, அடுத்துள்ள தண்டவாளத்தில் எதிர்திசையில் இருந்து வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் பயணிகள் மீது மோதியமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
லக்னோவில் இருந்து மும்பைக்கு செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ், ஜல்கான் அருகே இருந்தபோது, அதன் பெட்டிகளில் ஒன்றில் தீப்பிடித்ததாக வதந்தி பரவியது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு 8 ஆம்பியூலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாகவும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அருகிலுள்ள வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
மேலும், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதனிடையே, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ளார்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.