கண்டி பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினர், எல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்காக விற்கப்படும் ‘இ-டிக்கெட்’ தொடர்பான பெரும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடுஹும்பொல பகுதியில் நேற்று (22) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒடிசி ரயிலுக்கு ஆன்லைனில் கொள்வனவு செய்யப்பட்ட 21 ரயில் டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட் விற்பனை மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 130,670 ரூபாய் ரொக்கப் பணம், ரயில் டிக்கெட் விற்பனை விவரங்கள் பதிவு செய்யப்பட்ட 130 நோட்டு அட்டைகள், மொபைல் போன் ஆகியவற்றை இவரிடமிருந்து பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பிரபல சுற்றுலாப் பாதைகளுக்கான இ-டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளில் வியக்கத்தக்க வகையில் விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஜனவரி 20 அன்று சிஐடியினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சில குழுக்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு மறுவிற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
குறிப்பாக 2,000 ரூபாவான டிக்கெட் விலை மறுவிற்பனை மூலமாக 16,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமையும் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.