சீன செயற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக் (DeepSeek)தேசிய பாதுகாப்பு தாக்கங்களை அமெரிக்க அதிகாரிகள் கவனித்து வருவதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செவ்வாயன்று (28) கூறினார்.
சாத்தியமான பாதுகாப்பு மற்றும் நெறிமுறைக் கவலைகள் காரணமாக டீப்சீக்கின் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க கடற்படை தடை விதித்துள்ளதாக செய்திகள் வந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதனிடையே, டீப்சீக் தொழில்நுட்பத்தை பயனாளர்கள் எடுத்துக்கொள்வதைத் தடுக்க அமெரிக்க அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக ChatGPT தயாரிப்பாளரான OpenAI உறுதியளித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், டீப்சீக்கின் மலிவான மற்றும் சக்திவாய்ந்த AI மாடல் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் சரிவை ஏற்படுத்தியது.
டீப்சீக் குறைந்த செலவில் அதிக திறன் கொண்டதாக இருப்பதால், அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.
டீப்சீக் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்டது. அவர் ஒரு குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவர் ஆவார்.
இந்த நிறுவனம் டீப்சீக் R1 மற்றும் R1 ஜீரோ என்ற இரண்டு AI மொடல்களை உருவாக்கியுள்ளது.
R1 மொடல் தற்போது பயன்பாட்டில் உள்ளது. R1 ஜீரோ இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
ஆனால், அது தானாகவே கற்றுக்கொள்ளும் திறன் கொண்ட ஒரு மேம்பட்ட AI மொடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த AI மொடலை உருவாக்க வெறும் 6 மில்லியன் டொலர்கள் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.
இது அமெரிக்க நிறுவனங்கள் செலவு செய்த தொகையை விட மிகவும் குறைவு.
டீப்சீக்கின் முக்கிய அம்சம் என்னவென்றால், இது இலவசமாக கிடைக்கிறது.
ChatGPT மற்றும் Gemini போன்ற AI மொடல்கள் இலவசமாக கிடைக்கின்றன.
ஆனால், அவை பழைய பதிப்புகள் மட்டுமே. புதிய அம்சங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால், டீப்சீக் அனைத்து அம்சங்களையும் இலவசமாக வழங்குகிறது.