ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன(Priyantha Mayadunne) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் பிரியந்த மாயாதுன்னே பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு குருணாகலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிற்காக 183 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியமைக்காக பிரியந்த மாயாதுன்னே கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், இது தொடர்பில் பிரியந்த மாயாதுன்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான காரணங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரியந்த மாயாதுன்னவை இன்று கைது செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.