2025.02.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்:
01. வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும் (JICA) இடையிலான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்
இலங்கை அரசால் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் கடன் மீள்கட்டமைப்புக் கலந்துரையாடல்களைப் பூர்த்தி செய்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்ட பின்னர், ஜப்பான் அரசுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கமைய, ஜப்பான் அரசுடன் கடன் மீள்கட்டமைப்பு செயன்முறையைப் பூர்த்தி செய்வதற்கான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட வேண்டியுள்ளது. கையொப்பமிடப்பட வேண்டிய குறித்த ஆவணங்களுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, ஜப்பான் அரசுடன் பரிமாற்றுப் பத்திரம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்துடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. ஒருங்கிணைந்த கிராமிய – நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான தாங்குதிறன் கருத்திட்டம்
உலக வங்கியின் 100 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன் தொகை மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களின் அடிப்படையில், உணவுப் பயிர்கள், பெருந்தோட்டப் பயிர்கள், கால்நடைகள் மற்றும் கடலுணவு உற்பத்திகள் உள்ளிட்ட விவசாயத் துறையில் அனைத்துத் துறைசார் உற்பத்தித்திறன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் போட்டித்தன்மை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான தாங்குதிறனை அதிகரித்தல் போன்ற முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒருங்கிணைந்த கிராமிய – நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான தாங்குதிறன் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. காலநிலைக்கு மிடுக்கான விவசாயம் (Climate – Smart Agriculture) மற்றும் பன்முகப்படுத்தல், நீர்வள முகாமைத்துவம், பொருளாதார சமத்துவத்தை உறுதிப்படுத்தல், இயலளவு விருத்தி மற்றும் பயிற்சி, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வழங்கல் வசதிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற தலையீடுகள் மற்றும் செயற்பாடுகள் குறித்த கருத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க, 2025 யூன் மாதம் தொடக்கம் 05 வருடகாலத்தில் உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. மன்னார் மாவட்ட மருத்துவமனையில் திடீர் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டுமானம் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கல்
மன்னார் மாவட்டத்தில் காணப்படும் ஒரேயொரு மூன்றாம்நிலை சிகிச்சைகளுக்கான மருத்துவமனையான மன்னார் மாவட்ட மருத்துவமனையில் திடீர் விபத்துக்கள் மற்றும் தீடீர் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் கட்டுமானம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்காக உயர்ந்தபட்சம் 600 மில்லியன் இலங்கை ரூபாய்களை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. அப்பணிகளுக்கு இருதரப்பினருக்கிடையே கையொப்பமிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, இருதரப்பினருக்கிடையிலான குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. அரச சேவைக்கு ஏற்புடையதாகக் காணப்படுகின்ற சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை மீளாய்வு செய்தல்
ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளைச் சட்டங்கள் மற்றும் 1950 தொடக்கம் 1970 ஆம் ஆண்டு வரை இலங்கை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகப் பொறிமுறைகளே இன்னும் நடைமுறையிலுள்ளது. குறித்த காலப்பகுதியில் நாட்டில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புத் துறைகள் அந்தளவுக்கு முன்னேற்றமடையாத மட்டத்தில் காணப்பட்டதுடன், உருவாக்கப்பட்டுள்ள ஒருசில சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சமகால நிலைமைகளுக்குப் பொருத்தமற்றதாக இருப்பதால், சேவை பெறுநர்களுக்கு வினைத்திறனாகவும் பயனுறு வகையிலும் சேவைகளை வழங்குவதற்கு தடைகள் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், சமகால அரச சேவைகளின் தேவைகளுக்கு ஏற்புடைய வகையிலும் மற்றும் பொதுமக்களின் தேவைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கும் இயலுமாகும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஒழுங்குவிதிகள், நடபடிமுறைகளில் காணப்படும் தடைகளை நீக்குவதற்குத் தேவையான சட்ட ரீதியானதும், நிர்வாக ரீதியானதுமான மறுசீரமைப்புக்களை துரிதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கிணங்க, குறித்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொண்டு தற்போது காணப்படுகின்ற சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் நடபடிமுறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஏனைய அதிகாரிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
வறுமை ஒழிப்புக்காக அரச, தனியார் மற்றும் பொதுமக்களுடைய இடையீடுகளை ஒருங்கிணைப்புச் செய்வதற்கான வேலைத்திட்டமாக ‘கிராம சக்தி வேலைத்திட்டத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக 2017.03.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக ‘கிராமசக்தி செயலணி’ தாபிக்கப்பட்டுள்ளது. 2021.02.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த செயலணி ‘சுபீட்சத்திற்கான அபிவிருத்திச் செயலணியாக’ பெயரிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ தேசிய கொள்கைக்கமைவாக அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கம் மற்றும் அதற்கிணையான, கிராமிய தொழில் முயற்சிகள் மற்றும் வாழ்வாதார விருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் இயலளவு விருத்தி மூலம் கிராமியப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் மிகவும் விரிவான அணுகுமுறையுடன் கூடிய கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் சுபீட்சத்துக்கான அபிவிருத்தி செயலணிக் கட்டமைப்பு, விடயதானம் மற்றும் பணிப்பொறுப்புக்களை மீள்கட்டமைத்து, கிராமிய அபிவிருத்திச் செயலணி எனப் பெயரிடுவதற்கு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அவர்கள் சமர்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. மொரட்டுவ, பேராதனை, பௌத்த மற்றும் பாளி, சப்பிரகமுவ, களனி மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுமானங்களைப் பூர்த்தி செய்தல்
கொவிட் தொற்றுக் காரணமாகவும், அதற்குப் பின்னரும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் ஆரம்ப செலவுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களைப் பூர்த்தி செய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, மொரட்டுவ, பேராதனை, பௌத்த மற்றும் பாளி, சப்பிரகமுவ, களனி மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகங்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டியதென அடையாளங் காணப்பட்டுள்ள விடுதி வசதிகள், சிற்றுண்டிச்சாலைகள் போன்ற ஏனைய பொது வசதிகளை 2025 ஆம் ஆண்டில் குறித்த பெறுகை முறைமைகளைக் கடைப்பிடித்துப் பூர்த்தி செய்வதற்கும், எஞ்சிய வேலை விடயதானங்களை தேவைகளின் அடிப்படையில் மீண்டும் மீளாய்வு செய்து, 2026 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையின் CFM 56 – 5B இயந்திரத்தை திருத்தம் செய்வதற்கான ஒப்பந்தம் மற்றும் பராமரிப்பு, திருத்த வேலைகள் மற்றும் தொழிற்பாட்டு இயந்திர பிரித்துச் சீராக்கல் ஒப்பந்தம்
வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையின் CFM 56 – 5B இயந்திரத்தை திருத்தம் செய்வதற்கான ஒப்பந்தம் மற்றும் பராமரிப்பு, திருத்த வேலைகள் மற்றும் தொழிற்பாட்டு இயந்திர பிரித்துச் சீராக்கல் ஒப்பந்தத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக, 07 விலைமனுதாரர்கள் விலைமுறிகளைச் சமர்ப்பித்துள்ளனர். தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கபட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களைச் சமர்ப்பித்துள்ள குறைந்த விலைமனுதாரரான LHT)/Hamburg இற்கு குறித்த ஒப்பந்தத்தை நான்கு (04) வருடங்களுக்கு வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
உலகளாவிய புலமைச் சொத்து நிறுவகத்தால் நிர்வகிக்கப்படுகின்ற மெட்றிட் பதிவுக்கு (Madrid Registration) அணுகுவதற்காக நடவடிக்கைகளை தொடர்;ந்துவரும் காலங்களில் மேற்கொள்வதற்காகவும், அதற்காக 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக 2020.02.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. அதற்கமைய, வர்த்தக குறியீடு மற்றும் சேவைக் குறியீடுகளை சர்வதேச ரீதியில் பதிவு செய்வதற்கும், அதனுடன் தொடர்புடைய மேலதிக திருத்தங்கள் சில குறித்த சட்டமூலத்தில் உட்சேர்த்துக் கொள்வது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த திருத்தங்களை உள்ளடக்கி 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிக்கின்ற பணிகளைத் துரிதப்படுத்தி பூர்த்தி செய்யுமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய திரு. ரீ.ஜோன்.குவின்ஸ்ரன் அவர்கள் 2025.02.01 தொடக்கம் ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, குறித்த பதவியில் மேலதிக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாகக் கடமையாற்றுகின்ற கல்வி நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான திருமதி.டீ.ஏ. சுபாசினி தெமட்டகொட அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. நுவரெலியா நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
நுவரெலியா நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவியில் தற்போது கடமையாற்றுகின்ற திரு.ஜீ.கே.ஜீ.ஏ.ஆர்.பீ.கே. நந்தன அவர்களின் சேவைத் தேவைக்கமைய வேறு பொருத்தமான பதவிக்கு நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு இணைப்புச் செய்வதற்கும், அதற்கமைய வெற்றிடமாகும் நுவரெலியா நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபர் பதவிக்கு தற்போது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான திருமதி. ஆர்.ஏ.டீ.ரீ.என்.தென்னகோன் அவர்களை நியமிப்பதற்கும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. மாத்தறை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
மாத்தறை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவியில் தற்போது கடமையாற்றுகின்ற திரு. கணேச அமரசிங்ஹ அவர்களின் சேவைத் தேவைக்கமைய வேறு பொருத்தமான பதவிக்கு நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இணைப்புச் செய்வது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, வெற்றிடமாகும் மாத்தறை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு தற்போது சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் மேலதிக செயலாளராகக் கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான திரு. ஓபாத விதான சந்தன திலகரத்ன அவர்களை நியமிப்பதற்கும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. தாபன விதிக்கோவையின் i பகுதிVII இன் 8:5 அத்தியாயத்தின் உபபிரிவை திருத்தம் செய்தல்
அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பான ஏற்பாடுகள் தாபன விதிக்கோவையின் i ஆம் பகுதியில் VII ஆம் அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வெளியே கழித்த விடுமுறையின் பின்னர் மீண்டும் கடமைக்குத் திரும்பிய உத்தியோகத்தர் ஒருவர், கடமைக்கு மீளத்திரும்பிய அதே ஆண்டில் அல்லது அதை அடுத்து வரும் ஆண்டில் 8.5 ஆம் உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம் தொடர்ச்சியான 09 மாதச் சேவையினைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர், மீண்டும் ஒரு முறை நாட்டிற்கு வெளியே கழிப்பதற்காக குறித்த விடுமுறையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்ற சந்தர்ப்பத்தில், விடுமுறையை விட்டு மீண்டும் கடமைக்குத் திரும்பிய அதே ஆண்டில் அவர் அது வரையில் ஓய்வு விடுமுறை எதனையும் பெற்றிராத சந்தர்ப்பத்தில் மாத்திரமேயாகும். குறித்த ஏற்பாடுகளுக்கமைய, எதேனுமொரு ஊழியருக்கு ஒரு ஆண்டில் தனிப்பட்ட விடயங்களுக்கு உயர்ந்தபட்சம் இருதடவைகள் மாத்திரமே வெளிநாடு செல்வதற்கு இயலுமை காணப்பட்டது. தற்போது அரச ஊழியர்கள் கடமைகளுக்காகவும், தனிப்பட்ட விடயங்களுக்காக குறுகிய காலத்திற்கு வெளிநாடுகளுக்குச் செல்கின்றமையால், தாபன விதிக்கோவையின் ஐi பகுதி VII இன் 8:5 அத்தியாயத்தின் உபபிரிவுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அதனால், எமது நாட்டுக்கு வெளியே செலவிடுகின்ற விடுமுறையின் பின்னர் கடமைக்குத் திரும்பிய அதிகாரியொருவர், குறித்த ஆண்டிலேயே மீண்டுமொருமுறை விடுமுறையைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கும் போது, குறித்த ஊழியருக்கு அவ்வாறு விடுமுறை பெற்றுக்கொள்கின்ற ஆண்டில் உரித்தான எஞ்சிய ஓய்வு விடுமுறையைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 8:5 உபபிரிவைத் திருத்தம் செய்வதற்கு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. கடவுச் சீட்டு அச்சிடுவதை துரிதப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக பணியாளர்களை வழங்கல்
கடவுச்சீட்டுப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள புத்திஜீவிகள் குழுவின் விதந்துரைக்கமைய ‘பி’ வகைக் கடவுச்சீட்டுக்கள் 1,100,000 இனை சமகால விநியோகத்தர்களுக்கு வழங்குவதற்கான பெறுகை செயன்முறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான மேலதிக பணிக்குழாமினரை குறித்த திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதன் மூலமும் மற்றும் தற்போது அரச சேவையில் ஈடுபடுகின்ற ஊழியர்களை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சிடம் கேட்டறிந்து இணைப்புச் செய்வதன் மூலமும் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. உள்நாட்டு தெங்குசார் உற்பத்தி தொழிற்றுறை மற்றும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
எமது நாட்டில் தெங்கு உற்பத்தி போதுமானளவு இன்மையால் உள்நாட்டு நுகர்வுக்காக சந்தையில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக தற்காலிக உள்நாட்டுத் தேங்காய் உள்நாட்டு தெங்கு உற்பத்தியை அதிகரிப்பதற்க இயலுமாகும் வகையில், தேங்காயை மூலப்பொருட்களாகக் கொண்டு இயங்குகின்ற தொழிற்றுறைகளுக்குத் தேவையான தேங்காய்ச்சில் (Kernel)) மற்றும் தேங்காய்ச்சில் சார்ந்த ஏனைய மூலப்பொருட்கள் தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ரீதியான ஏற்பாடுகளுக்கு இணங்கி துரிதமாக இறக்கமதி செய்யக்கூடிய இயலுமையை குறித்த தரப்பினர்களுடன் கலந்துரையாடி அதற்கான பொறிமுறையைத் தயாரிக்குமாறு 2025.01.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைக்கப்பட்டது. அதற்கமைய, விவசாயத் திணைக்களம், தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, தாவரத் தொற்றுக்காப்பு சேவை மற்றும் இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனம் இணைந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்ச்சில் மற்றும் உலர் தேங்காய்ச்சில் துண்டுகள் (கொப்பரா அல்லாத), தேங்காய் பால்ஃதேங்காய்ப் பால்மா மற்றும் பதனிடப்பட்ட தேங்காய்ப்பூ போன்றவற்றின் இறக்குமதிக்கு ஏற்புடைய வழிகாட்டியொன்று தயாரிக்கப்பட்டு சமர்;ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழிகாட்டியைக் கடைப்பிடித்து, 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும் இணைந்து சமர்ப்பிப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.