இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்துவதாக ஹமாஸ் திங்களன்று (10) அறிவித்தது.
இந்த அறிவிப்பின் போது, பாலஸ்தீனிய போராளிக் குழு காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாகக் குற்றம் சாட்டியதுடன், மோதலை மீண்டும் அதிகரிக்கும் அபாயத்தையும் உயர்த்தியது.
கடந்த மூன்று வாரங்களாக நடந்ததைப் போல இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் பிற பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக சனிக்கிழமை அதிகமான இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க இருந்தது.
சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் தனது அறிவிப்பை வெளியிட்டதாக ஹமாஸ் கூறியது.
இதனிடையே, ஹமாஸின் நடவடிக்கை போர்நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஜ் கூறினார்.
மேலும் காசா மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக இராணுவத்தை தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தினார்.
செவ்வாய்க்கிழமை காலை பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் அடங்கிய பாதுகாப்பு அமைச்சரவையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்திப்பார் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்கள் திங்களன்று ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் மத்தியஸ்தர்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிடுமோ என்று அச்சம் வெளியிட்டனர்.
கட்டாரும் எகிப்தும் அமெரிக்காவுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
ஜனவரி 19 ஆம் திகதி போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து, 566 கைதிகளுக்கு ஈடாக 16 இஸ்ரேலியர் மற்றும் ஐந்து தாய்லாந்து பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வாரங்களில் போர் நிறுத்தத்தின் முதல் கட்ட முடிவில், 33 பணயக்கைதிகள் மற்றும் 1,900 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
33 பேரில் எட்டு பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஹமாஸ் 2023 அக்டோபரில் தாக்கியபோது 251 பணயக்கைதிகளைப் பிடித்து சுமார் 1,200 பேரைக் கொன்றது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
இதில் 48,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.