ரஷ்யா – அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் செவ்வாயன்று (18) சவுதி அரேபியாவில் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள திரியா அரண்மனையில் கூடிய தூதுக்குழுக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரும் தலைமை தாங்கினர்.
ரூபியோவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோரும் உடனிருந்தனர்.
அதேநேரத்தில், லாவ்ரோவ் கிரெம்ளினின் ரஷ்யாவின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோரை பேச்சுவார்த்தைக்காக அழைத்து வந்தார்.
சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முஸயத் அல் அல்பன் ஆகியோர் கூட்டத்தின் தொடக்கத்தில் இருந்தனர்.
ஆனால் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் அவர்கள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சந்திப்பில் உக்ரேனின் பிரதிநிதிகள் எவரும் பங்கெடுக்கவில்லை.
இதனிடையே, உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திங்களன்று, தனது நாடு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாவிட்டால் ரியாத்தில் எடுக்கப்படும் எந்த சமாதான உடன்பாட்டையும் ஏற்க மாட்டோம் என்று கூறினார்.
ரஷ்யாவை தனிமைப்படுத்தும் அமெரிக்க கொள்கையை மாற்றியமைக்க ட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை இந்த சந்திப்பு அடையாளப்படுத்துகிறது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு இடையிலான சந்திப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
கடந்த வாரம் ட்ரம்ப், உக்ரேன் மற்றும் ரஷ்யா மீதான அமெரிக்காவின் பார்வையை உயர்த்தியதுடன், போரை முடிவுக்கு கொண்டு வர இரு தலைவர்களுடனும் தெலைப்பேசியில் உரையாடினார்.
2022 பெப்ரவரியில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்க ஜெலென்ஸ்கியும், புட்டினும் இதன்போது இணக்கம் வெளியிட்டிருந்தனர்.