இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மீனவர்களினால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியில் கடையடைப்புப் போராட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையிர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால், கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காரைக்கால் மீனவர்கள் பாரிய போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.இலங்கை கடற்படையினரின் செயற்பாடுகள், மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களை காக்க தவறிய இந்திய மத்திய அரசாங்கமான பா.ஜ.க. அரசாங்கத்தை கண்டித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஆதரவினை வழங்கும்பொறுட்டு, அப்பகுதியில் கடையடைப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும், காரைக்கால் ரயில் நிலையத்தில் வேளாங்கண்ணிக்கு செல்லும் ரயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.