மியன்மார் நாட்டில் சீனாவைச் சேர்ந்த இணைய மோசடி குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கியுள்ள 150 இந்தியர்கள் தங்களை மீட்கும்படி மத்திய அரசுக்கு இன்று (18) கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த இந்தியர்களை இணைய மோசடிக் குற்றவாளிகள், வெளிநாட்டில் வேலை மற்றும் அதிக சம்பளம் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அவர்களை மியன்மாருக்கு அழைத்து வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சீனாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கியுள்ளனர் எனவும், அவர்கள் மியான்மர் நாட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களிடம் இருந்த தொலைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த பகுதிகள் அனைத்தும் அரச நிர்வாகத்தில் இல்லாதவை என்பதாலும் அரசை எதிர்த்து போர் நடத்தும் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் மியான்மர் அரசால் எதுவும் செய்ய முடியவில்லை தெரிவித்துள்ளது.
மேலும் அடிமைகளாக சிக்கியுள்ள இந்தியர்கள் இணையம் மூலம் இந்தியர்களிடம் பல்வேறு வகையிலான ஒன்லைன் மோசடியில் ஈடுபடும்படி கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.