நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள புனித போப் பிரான்சிஸ், இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அவரது சிறுநீரக செயல்பாட்டில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வத்திக்கான் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது.
நீண்டகால ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியை எதிர்கொண்ட 88 வயதான கத்தோலிக்க பேரவையின் தலைவருக்கு சனிக்கிழமை இரண்டு யூனிட் இரத்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
பெப்ரவரி 14 அன்று போப் பிரான்சிஸ், ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை (22 அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வத்திக்கான் முதன்முதலில் அறிவித்தது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் ஒரு அறிவிப்பில், பரிசுத்த தந்தையின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது, எனினும் நேற்று இரவு (சனிக்கிழமை இரவு) முதல் அவருக்கு சுவாசக் கோளாறுகள் எதுவும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனைகள் சிறுநீரக செயல்பாட்டில் இலகுவான பாதிப்பை குறிக்கின்றன, இது தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் வத்திக்கான் கூறியது.
2013 ஆம் ஆண்டு முதல் போப்பாக இருக்கும் பிரான்சிஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இளம் வயதிலேயே நுரையீரல் ஒவ்வாமை ஏற்பட்டு, ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதால், அவர் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.