ராவல்பிண்டி, கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெறவிருந்த அவுஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2025 சாம்பியன்ஸ் டிராபி குழு பி நிலை போட்டி இடைவிடாத மழையால் கைவிடப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து ராவல்பிண்டியில் பெய்த மழையானது மைதானத்தை போட்டிக்கு தயார்படுத்துவதற்கு மைதான ஊழியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
பாகிஸ்தான் நேரப்படி இரவு 07.32 மணியளவில் குறைந்த பட்சம் டி20 ஓவர்கள் வடிவில் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தது.
எனினும், பலத்த மழை மற்றும் மைதானத்தின் ஈரப்பதம் உள்ளிட்ட காரணங்களால் நாணய சுழற்சிக் கூட மேற்கொள்ளப்படாது மாலை 05.10 மணிக்கு ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மழையையும் துணிச்சலாக எதிர்கொண்டு, இரு அணிகளுக்கு இடையிலான சாம்பியன் டிராபி ஆட்டத்தை பார்க்க வந்த ஏராளமான ரசிகர்களுக்கு இது பெரும் கவலையாக அமைந்தது.
இதனிடையே, தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.
அதேநேரம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் இடையேயான புதன்கிழமை (26) நடைபெறும் போட்டியையும் இந்த முடிவு நாக் அவுட் ஆக்கியது.
இந்த ஆட்டத்தில் தோல்வியடையும் அணி வெளியேற்றப்படும்.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் குழு ஏ இன் நிலை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
மழையால் சிக்கலான குழு பி இன் நிலையில், அவுஸ்திரேலியா வெள்ளிக்கிழமை லாகூரில் அமைந்துள்ள கடாபி மைதானத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
தென்னாப்பிரிக்கா இப்போது கராச்சியில் தனது கடைசி ஆட்டத்தில் சனிக்கிழமையன்று இங்கிலாந்துடன் மோதும்.