காசா பகுதியில் போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் முடிவுக்கு வரவுள்ள சில நாட்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததற்கு ஈடாக நான்கு பணயக்கைதிகளின் உடல்களை வியாழன் (27) அதிகாலை செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்தது.
ஹமாஸ் பணயக்கைதிகளின் உடல்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்ததை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி உறுதிப்படுத்தினார்.
ஒப்படைக்கப்பட்ட உல்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியது.
அதே நேரத்தில், விடுவிக்கப்பட்ட பல பாலஸ்தீனிய கைதிகளை ஏற்றிச் சென்ற செஞ்சிலுவைச் சங்க வாகனத் தொடரணி ஒன்று இஸ்ரேலின் ஆஃபர் சிறையிலிருந்து மேற்குக் கரை நகரமான பெய்டுனியாவை நோக்கிச் சென்றது.
பஸ்களில் விடுவிக்கப்பட்ட கைதிகளை பார்வையிடுவதற்காக அங்கு நூற்றுக்கணக்கான நலன் விரும்பிகள் கூடியிருந்தனர்.
விடுதலை செய்யப்பட்ட கைதிகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கட்டிப்பிடித்தும், புகைப்படங்கள் எடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
600க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்த போது பணயக்கைதிகளை கொடூரமாக நடத்தியதை எதிர்த்து இஸ்ரேல் சனிக்கிழமை முதல் அவர்களது விடுதலையை தாமதப்படுத்தியது.
இந்த தாமதத்தை போர்நிறுத்தத்தின் “தீவிர மீறல்” என்று கூறிய போராளி குழு, பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படும் வரை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளது.
போர் நிறுத்தம் ஜனவரி 19 முதல் நடைமுறைக்கு வந்தது, பல பின்னடைவுகள் இருந்தபோதிலும், பெரும்பாலும் அமுலில் இருந்தது.
ஆனால், அதன் முதல் கட்டம் இந்த வாரத்தில் முடிவடைய உள்ளது மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அதன் அடுத்த கட்டத்தின் தலைவிதி தெளிவாக இல்லை.