சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் நடிகை விஜயலட்சுமியிடம் 7 மணி நேரம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை 2012-ம் ஆண்டு விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இந்த விசாரணை மீண்டும் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை இரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றில் சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கலாம் எனவும், 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன்பேரில் வளசரவாக்கம் பொலிஸார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, நேற்று வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமி வீட்டுக்கு வளசரவாக்கம் பொலிஸார் மீண்டும் நேரில் சென்று அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் இன்று விசாரணைக்கு சமூகமளிக்குமாறு சீமானுக்கு பொலிஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். எனினும் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற இருப்பதால் சீமான், இன்று ஆஜராகமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறு இருப்பினும் வளசரவாக்கம் பொலிஸாரிடம் உரிய விளக்கம் அளிக்க சீமானின் வழக்கறிஞர்கள் குழு அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.