பாகிஸ்தானில் நடைபெற்று வரும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் புதன்கிழமை (26) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி அளித்துள்ளது.
லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பமான குழு பி க்கான த்ரில்லர் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரன் 177 ஓட்டங்களை குவித்தார்.
இவர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் மூன்று ஆரம்ப விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணிக்கு இறுதியில் 325 ஓட்டங்களை குவிப்பதற்கு உதவினார்.
அதேநேரம், அவர் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையும் இதன்போது பதிவு செய்தார்.
326 ஓட்டம் என்ற சேஸிங்கில் ஜோ ரூட்டின் கிளாசிக்கலான 120 ஓட்டங்கள் 46 ஆவது ஓவர் வரை இலக்கினை துரத்துவதில் இங்கிலாந்தை உயிர்ப்புடன் வைத்தது.
எனினும் பின்னர், அஸ்மத்துல்லாஹ் ஓமர்சாயின் பந்து வீச்சில் ஜோ ரூட் ஆட்டமிழந்து வெளியேறியமை இங்கிலாந்தின் அரையிறுதிக்கான கனவினை கலைத்தது.
ஒட்டுமொத்தமாக இப்ராஹிம் சத்ரானின் கம்பீரமான 177 ஓட்டங்களும் வேகப்பந்து வீச்சாளர் அஸ்மத்துல்லா ஓமர்சாயின் பந்து வீச்சும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து வெளியேற்றியது.
குழு நிலை போட்டியில் முன்னதாக எதிர்கொண்ட ஆட்டத்தில் இங்கிலாந்து அவுஸ்திரேலியாவிடம் 05 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
எவ்வாறெனினும், மார்ச் 01 ஆம் திகதி கராச்சியில் நடைபெறும் இறுதி குழு நிலை ஆட்டத்தில் இங்கிலாந்து, தற்சமயம் மூன்று புள்ளிகளுடன் இருக்கும் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.
அதேநேரம், பெப்ரவரி 21 கராச்சியில் நடந்த தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவியிருந்தாலும், இந்த வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் இரண்டு புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பில் தொங்கிக் கொண்டுள்ளது.
அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுதவற்கு நாளை லாகூரில் நடைபெறவுள்ள போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும்.
அவுஸ்திரேலிய அணியும் தற்சமயம் ஒரு வெற்றியுடன் மூன்று புள்ளிகளுடன் உள்ளது.
போட்டி சாராம்சம்
லாகூரில் நேற்று (26) பிற்பகல் ஆரம்பமான இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 37 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இப்ராஹிம் சத்ரான் நிலையான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்களை குவித்தது.
ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபடியாக இப்ராஹிம் சத்ரான் 177 (146) ஓட்டங்களையும், அஸ்மத்துல்லா உமர்சாய் 41 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் அதிகபடியாக ஜோஃப்ரா ஆர்ச்சர் மூன்று விக்கெட்டுகளையும், ஜேமி ஓவர்டன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
326 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 08 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்து சார்பில் அதிகபடியாக ஜோ ரூட் மாத்திரம் 120 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் அஸ்மத்துல்லா உமர்சாய் 5 விக்கெட்டுகளையும், மொஹமட் நபி ஒரு விக்கெட்டினையும் அதிகபடியாக வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இப்ராஹிம் சத்ரான் தெரிவானார்.