மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடூரமான உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகிறார்.
உடலில் பல காயங்கள், அந்தரங்க உறுப்புகளில் காயங்களுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் 17 வயது சிறுவன் குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்,
பொலிஸாரின் கூற்றுப்படி, சிறுவன் சிறுமியை தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது, அங்கு அவர் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர், வன்புணர்வுக்கு பின்னர், சிறுமியின் தலையை தரையில் பலமுறை மோதிக் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதனால், அவரது தலையில் பெரிய காயங்கள் ஏற்பட்டது.
தற்போது குவாலியரில் உள்ள வைத்தியசாலையில் சிறுமி உயிருக்கு போராடி வருகிறார்.
உடல் முழுவதும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, அந்தரங்க உறுப்புகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவளுக்கு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அவளுடைய பிறப்புறுப்புகளுக்கு 28 தையல்கள் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் மதுபோதையில் இருந்ததாகவும், பெப்ரவரி 22 அன்று சிறுமியை அவரது வீட்டின் மாடியில் இருந்து அருகிலுள்ள கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு சிறுவன், பாலியல் வன்புணர்வு செய்து காயங்களை ஏற்படுத்தியதால் சிறுமி மயக்கமடைந்தார்.
சுயநினைவு திரும்பிய பின்னர், சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த கொடுமையை விவரித்தார்.
இது முறைப்பாடு மற்றும் பொலிஸ் நடவடிக்கைக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில் இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
குவாலியரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையைத் தொடர்புகொண்டு, நீதியை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
குற்றம் சாட்டப்பட்டவரை பதின்மை வயதைக் கடந்தவர் எனக் கருதி, அதிகபட்சமாக மரண தண்டனையை வழங்க வேண்டும் என்று சிறுமியின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.