இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த சாந்தன் உயிரிழந்து இன்றுடன் ஓராண்டு கடந்தள்ள நிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் அன்னாரின் துயிலுமில்லம் அவரது தயாரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவர் அடக்கம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம், எள்ளங்குளம் மயானத்தில், அவரது துயிலுமில்லம் இன்று பொது மக்கள் அஞ்சலிக்காக திறந்து வைக்கப்பட்டது.
சாந்தனின் குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சாந்தன் துயிலாயம் அன்னாரின், தாயாரால் இன்று காலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சாந்தனின் விடுதலைக்காக அவரது குடும்பத்தினர் 33 வருடங்களாக தொடர்ச்சியாக போராடி வந்தனர்.
சிறையில் இருந்து விடுதலையான பின்னர் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரை, மீள இலங்கைக்கு அழைத்து வர அவரது குடும்பத்தினர் சுமார் ஒன்றரை வருட காலமாக போராடினார்கள்.
தமிழ் அரசியல் வாதிகள் பலரும் இந்த விடயத்தில் பாரமுகமாக செயற்பட்ட நிலையில், நோய்வாய்ப்பட்டு இறந்த சாந்தனின் உடலே இறுதியாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.