யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளினிக் சேவைகள் இன்று முதல் வழமை போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது தொழிற்சங்க நடவடிக்கை நேற்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுத்திருந்தனர்.இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்க முகங்கொடுத்திருந்த நிலையில் நோயாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய, வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மக்கள் நலன் கருதி கிளினிக் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், கிளினிக்குகள், வெளி நோயாளர் பிரிவு மற்றும் பிற சேவைகள் இன்று மாலை 4 மணி முதல் வழக்கம் போல் செயற்படும் என்றும், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் பாதுகாப்பை முன்னுறுத்தி , கலந்துரையாடலின் போது பணிப்பாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில் முன்னறிவிப்பின்றி முழு அளவில் தொழில் சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.