சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியாகி இருக்கிறது. அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், பங்களாதேஷ், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.
இதேவேளை உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அசாமில் உள்ள பைர்னிஹாட், டெல்லி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், ஃபரிதாபாத், லோனி, புது டெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர், நொய்டா ஆகிய 13 நகரங்கள் அதிக மாசுபட்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
அசாமின் பைர்னிஹாட் நகரம் உலகின் மாசுபட்ட நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், உலகில் மாசுபட்ட தலைநகரங்களில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது.
அதேநேரத்தில், உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் 2023-ல் 3வது இடத்தில் இருந்த இந்தியா, 2024ல் 5-வது இடத்திற்குச் சென்றுள்ளது.
இந்தியாவில் காற்று மாசுபாடு கடுமையான சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதனால், இந்தியர்களின் ஆயுள் காலம் 5.2 ஆண்டுகள் குறைகிறது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவின் மிகவும் மாசுபட்ட நகராக கலிஃபோர்னியா அடையாளம் காணப்பட்டுள்ளது. பிற மாசுபட்ட நகரங்களாக லாஸ் ஏஞ்சல்ஸ், ஆன்டாரியோ ஆகியவை உள்ளன. சியாட்டில், வாஷிங்டன் ஆகியவை தூய்மையான நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. உலகின் மிகவும் தூய்மையான பகுதியாக பியூர்டோ ரிகோவின் மயாகீஸ்,
இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.