ராய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நடந்த 2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி, மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை 06 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அம்பதி ராயுடு 50 பந்துகளில் 74 ஓட்டங்களை எடுத்து இந்தியா மாஸ்டர்ஸ் அணியின் சேஸிங்கை வலுப்படுத்தியதுடன், 17 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றியிலக்கினை அடைவதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் மார்ஸ்டர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களை எடுத்தது.
லென்ட்ல் சிம்மன்ஸ் (41 பந்துகளில் 57 ஓட்டம்) மற்றும் டுவைன் ஸ்மித் (35 பந்துகளில் 45 ஓட்டம்) மாத்திரம் அதிகபடியாக ஓட்டங்களை எடுத்து போராடினர்.
இந்தியா மாஸ்டர்ஸ் பந்துவீச்சு பிரிவில் வினய் குமார் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார், அவர் 26 ஓட்டங்களை வழங்கி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அவர் இன்னிங்ஸின் ஆரம்பத்தில் அணித் தலைவர் பிரையன் லாராவை பவர்பிளேயில் வெளியேற்றினார், மேலும் டெத் ஓவர்களில் சிம்மன்ஸ் மற்றும் ஆஷ்லே நர்ஸ் போன்றவர்களையும் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார்.
ஷாபாஸ் நதீமும் பந்து வீச்சில் தனது அபாரமான திறனை வழங்கினார்.
அவர் 4 ஓவர்களுக்கு பந்து பரிமாற்றம் மேற்கொண்டு 12 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலமாக சச்சின் டெண்டுல்கர் தனது சிறந்த தலைமைத்துவத்தால் பல ஆண்டுகளை பின்னோக்கிப் புரட்டிப் போட்டார்.
அத்துடன், மைதானத்தில் கூடியிருந்த 50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
இந்த இன்னிங்ஸில் அவர் 18 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 25 ஓட்டங்களை எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.