நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படுமென தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு பெரும்போக நெற்செய்கையின் போது இரண்டு, சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும் இது அரிசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது 8 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் குறைந்தபட்சம் 20 சதவீதம் வரை எதிர்பார்த்த விளைச்சல் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அறுவடை நேரத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளினால் நெல் வயல்கள் சேதமடைவதால், விளைச்சல் மேலும் குறையும் என்றும் அரிசி பற்றாக்குறையை சமாளிக்க, அடுத்த பருவத்தில் குறைந்தது 7 இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அனுராத தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அரிசி கையிருப்பு குறையுமாயின் நாடு கடுமையான அரிசி பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்பதுடன், அரிசியை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.