சில கிழமைகளுக்கு முன்பு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம் நடத்திய ஒரு ஊடகச் சந்திப்பில்,ஒரு வசனத்தைச் சொன்னார்.”நாங்கள் மட்டும் தோற்கவில்லை”. இதை அவர் எத்தகைய அர்த்தத்தில் சொன்னார் ? இது எல்லாருக்குமான தோல்வி என்ற அர்த்தத்தில் சொன்னாரா? அல்லது எல்லாருமே தோற்றிருக்கிறார்கள். எனவே இதில் எங்களை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? என்ற அர்த்தத்தில் சொன்னாரா ?
எல்லாருக்குமே தோல்வி ஏற்பட்டிருக்கிறது என்பதை அதன் சரியான வார்த்தைகளில் சொன்னால்,தமிழ்த் தேசியத் தரப்பைச் சேர்ந்த கட்சிகள் எல்லாவற்றுக்குமே பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.அந்த பின்னடைவுக்கு யார் பொறுப்பு? ஒரு மூத்த கட்சியாக, உள்ளதில் பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சி எடுத்த முடிவுகள் அதற்குக் காரணம் இல்லையா ? இந்தத் தோல்வியானது கடந்த 15 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான தோல்விகளில் ஆகப்பிந்தியது என்பதனை சிவிகே சிவஞானமும் தமிழரசுக் கட்சியும் ஏற்றுக்கொள்ளுமா? இந்தத் தொடர் தோல்விகளுக்கு காரணம் என்ன?
காரணம் மிகவும் எளிமையானது. தமிழரசுக் கட்சி தன்னை எல்லாக் கட்சிகளையும் விட உயர்வானது, பெரியது, தலைமைப் பொறுப்பில் இருப்பது என்றெல்லாம் கூறிக்கொள்கின்றது. ஆனால் அந்தக் கட்சி அந்தப் பொறுப்பை உணர்ந்து நடக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக சம்பந்தர் அந்தக் கட்சியை கொழுப்பை நோக்கிச் சாய்த்துசெல்ல முற்பட்டார்.அதன் விளைவாக கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் பலமாக மேலெழுந்து விட்டன. ஒரு நிலைப்பாடு கொழும்பை நோக்கிச் சாய்வது. இன்னொரு நிலைப்பாடு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக இருப்பது. சம்பந்தர் நினைத்தது போல கட்சியை செங்குத்தாகக் கொழும்பை நோக்கித் திருப்ப முடியவில்லை. அதன் விளைவாக மேற்சொன்ன இரண்டு போக்குகளும் ஒன்று மற்றதற்கு எதிரானதாக மேல் எழுந்துவிட்டன. அதன் விளைவாகக் கட்சி இரண்டாகப் பிளந்து கிடக்கின்றது. கட்சி இப்பொழுதும் நீதிமன்றத்தில்தான் நிற்கின்றது.கட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவருமாகிய சுமந்திரன் கட்சிக்குள் புத்திசாலித்தனமாக உள்நுழைந்து கட்சியைப் படிப்படியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டவர். கடந்த ஆண்டின் இறுதியில் நாடு முழுவதும் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவர் கட்சிக்குள் ஒரு பிரதானியாகத் தன்னைப் பலப்படுத்தி வருகிறார். தேர்தலில் தோற்ற ஒருவர் கட்சிக்குள் இவ்வளவு முக்கியத்துவத்தை பெறுவதை எப்படிப் பார்ப்பது?
தேர்தலில் வெற்றி பெறுவதை ஒரு பிரதான தகுதியாகக் கருதிய சம்பந்தர் அதைச் சொல்லித்தான் ஏனைய கட்சிகளை மட்டம் தட்டுவார்.சம்பந்தரின் வார்த்தைகளில் சொன்னால் தேர்தலில் வெல்லாத ஒருவர் கட்சிக்குள் தன்னுடைய பிடியைப் பலப்படுத்தி வருகிறார். இதை எப்படிப் பார்ப்பது?
கட்சியைப் பலப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அவர் முன்னெடுக்கும் எல்லா நடவடிக்கைகளிலும் மற்றொரு உள்நோக்கமும் இருக்கும்.சிறீதரனை எப்படி கிளிநொச்சிக்குள் முடக்குவது? என்பதே அந்த உள்நோக்கம். சிறீதரனையும் அவருடைய அணியையும் முடக்குவதற்கு அவர் பயன்படுத்தும் பிரதான ஆயுதங்களில் ஒன்று பொது வேட்பாளரை ஆதரித்தமை.
பொது வேட்பாளர் என்ற கருத்துருவமே தமிழ் அரசியலில் புதுமையானது. அது கடந்த 15 ஆண்டு கால ரியாக்ரிவ்-பதில் வினையாற்றும் அரசியலில் இருந்து தமிழ் அரசியலை ப்ரோ ஆக்டிவாக – செயல்முனைப்பு உள்ளதாக மற்றும் நோக்கத்தைக் கொண்டது.அது கட்சி கடந்து ஒரு திரட்சியை ஏற்படுத்த முயற்சித்தது. கிழக்கிலிருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒன்றரை லட்சத்துக்கு மேலான வாக்குகள் கிடைத்தன. அது ஒரு சாதாரண தொகை அல்ல. தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு தனி அரசியல்வாதிக்கு இதுவரை கிடைத்த வாக்குகளில் அதிகமான தொகை வாக்குகள் அவை.
அந்த வாக்குகளைத் திரட்டும் குறியீடாக தேர்தலில் நின்றவர் அரியனேத்திரன். அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர். நமது கட்சி உறுப்பினர் ஒருவருக்கு அவ்வாறு அதிக தொகை வாக்குகள் கிடைத்ததை, தமது கட்சி உறுப்பினர் ஒருவர் தாயக ஒருமைப்பாட்டுக்காக வாக்குகளை திரட்டும் ஒரு குறியீடாக தேர்தலில் நின்றமையை, தமது கட்சி உறுப்பினர் ஒருவர் தமிழ் அரசியலை செயலூக்கம் மிக்கதாக மாற்றும் உயர்வான நோக்கத்தோடு ஒரு தேர்தலில் நின்றமையை, தமது கட்சி உறுப்பினர் ஒருவர் தேசத்தைத் திரட்டும் குறியீடாக ஒரு சந்நியாசி போல தேர்தலில் நின்றதை, தமிழரசுக் கட்சி எப்படிப் பார்க்கின்றது? அதை ஒரு குற்றமாகக் கூறி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது. அதாவது அவர் செய்த குற்றம் தேசத்தைத் திரட்டியது. தமிழரசுக் கட்சிக்கு தனது கட்சிக்காரரின் மகிமையே தெரியவில்லை. தேசத்தைத் திரட்டிய குற்றத்துக்காக அரியநேத்திரனை கட்சியை விட்டு நீக்கலாமென்றால் அதே குற்றத்துக்காக பொது வேட்பாளரை ஆதரித்த ஏனையவர்களிடம் விளக்கம் கேட்கலாமென்றால், தமிழரசு கட்சி எங்கே நிற்கின்றது? தேசத் திரட்சிக்கு எதிராகவா நிக்கிறது?
இப்பொழுது ரணில் விக்கிரமசிங்காவின் அல்ஜசீரா பேட்டி தொடர்பாக எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். அந்தப் போட்டியில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் பிரதான செய்தி, ரணில் இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூற மாட்டார் என்பதுதான்.ரணில் விக்கிரமசிங்கம் மட்டுமல்ல, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெற்ற சஜித் பிரேமதாசவும் பொறுப்புக் கூறத் தயாரில்லை.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐநா கூட்டத் தொடர் நடந்து கொண்டு இருந்தது.அப்பொழுது தமிழ் வாக்குகளில் தங்கியிருந்த சஜித் என்ன சொன்னார் ? பன்னாட்டுப் பொறிமுறைக்கு எதிராகத்தான் கருத்து தெரிவித்திருந்தார். எனவே ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல, மகிந்த மட்டுமல்ல, அனுர மட்டுமல்ல, சஜித்தும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறத் தயார் இல்லை. ஆனால் சுமந்திரன் அவருக்கு ஆதரவாக பகிரங்கமாக மேடையில் தோன்றினார். பொது வேட்பாளருக்காக விழும் வாக்குகள் வீணாகப்போன வாக்குகள் என்று கூறினார். பொது வேட்பாளருக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு எதிராக பகிரங்கமாக பிரகடனங்களை வெளியிட்டார். பொது வேட்பாளரை ஆதரித்த தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தனக்கு விசுவாசமான கட்சியின் மத்திய குழுவைத் தூண்டி வருகிறார். அப்படி என்றால் சுமந்திரன் எங்கே இருக்கிறார்? தேசத் திரட்சிக்கு ஆதரவாகவா? தேசத் திரட்சிக்கு எதிராகவா? பொறுப்புக் கூறலுக்கு ஆதரவாகவா? பொறுப்புகு கூறலுக்கு எதிராகவா ? தேசத் திரட்சியை அவர் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்?
கட்சியை ஒரு கட்டுக்கோப்பான இறுக்கமான ஸ்தாபனமாகத் திரட்ட முடியாத ஒருவர் எப்படித் தேசத்தைத் திரட்ட முடியும்? தானே ஒரு திரண்ட கட்டமைப்பாக இல்லாத கட்சி தேசத்தைத் திரட்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?
பொது வேட்பாளரின் விடயத்தில் தேசத் திரட்சிக்கு எதிராக நின்றவர்,கட்சிக்குள் தனது பிடியை படிப்படியாகப் பலப்படுத்தி வருகிறார். தேசத் திரட்சிக்கான குறியீடாக நின்ற அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அரியநேத்திரனுக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி எடுத்த நடவடிக்கை என்பது அக்கட்சியின் மத்திய குழு எடுத்த முடிவுகளிலேயே பாரதூரமான ஒரு வரலாற்றுத் தவறு. தேசத் திரட்சியின் குறியீடாக நின்ற தன் கட்சிக்காரரின் மகிமை தமிழரசுக் கட்சிக்கே தெரியவில்லை.கட்சி அரசியலானது தேசிய உணர்வை மழுங்கடித்து விட்டதா?
தமிழ்த் தேசிய வரலாற்றில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதியில் ஒரு தனித்தமிழ் வேட்பாளர் பெற்ற ஆகக் கூடிய வாக்குகளை அரியநேத்திரன் பெற்றார்.அந்த மகத்துவத்தை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அவருடைய கட்சியின் மத்திய குழு அதன் தேசிய ஆன்மாவை இழந்து விட்டதா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 257,813. அரியநேத்திரனுக்கு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகள் 2,25,000. அவை தேசத்தைத் திரட்டலாம் என்ற நம்பிக்கைக்கு கிடைத்த அடிப்படை வாக்குகள். அவை பொதுக் கட்டமைப்புக்கு மட்டும் சொந்தமான வாக்குகள் அல்ல என்பதை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் நிரூபித்தார்கள். அவை கட்சி கடந்த தேசத் திரட்சிக்கு கிடைத்த வாக்குகள்.
ஆனால் அரியநேத்திரனின் மகத்துவத்தை அவருடைய சொந்தக் கட்சியே உணரத் தவறிவிட்டது மட்டுமல்ல அவரைக் கட்சிக்குள் இருந்து நீக்கியதன் மூலம் கட்சியின் மத்திய குழு தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தும் செய்தி என்ன? தேசத் திரட்சிக்கு எதிராக நிற்கிறோம் என்பதா?
தேசத் திரட்சிக்காக ஒரு சன்னியாசியைப் போல குறியீடாக நின்ற அரியம் கட்சிக்கு வெளியே. தேசத் திரட்சிக்கு எதிராகவும் பொறுப்புக் கூறலுக்கு எதிராகவும் தமிழ் வாக்குகளை சஜித்திற்குச் சாய்த்துக் கொடுத்தவரும் அதை ஆதரிப்பவர்களும் கூறுகிறார்கள் “நாடு அனுரவோடு; ஊர் எங்களோடு” என்று. ஆனால் கட்சி யாரோடு?