2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நிறைவிற்கு வந்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தால் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை உடனடியாக மதிப்பீட்டிற்கு அனுப்புமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த நகைகளை தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபைக்கு அனுப்பிச் சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.
குறித்த ஆபரணங்கள் கடந்த 02ஆம் திகதி கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தலைமையகத்தில் வைத்து பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.
இதன்போது பதில் பொலிஸ் மா அதிபரினால் பொறுப்பேற்கப்பட்ட குறித்த ஆபரணங்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையினால் அதன் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரே இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.