11 வார முற்றுகைக்குப் பின்னர், உதவி லொறிகள் எல்லையைக் கடக்கத் தொடங்கிய போதிலும், காசாவில் இன்னும் எந்த உதவியும் விநியோகிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
செவ்வாய்க்கிழமை (20) 93 லொறிகள் காசாவிற்குள் நுழைந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவை கோதுமை மா, குழந்தை உணவுகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்றன.
ஆனால், கெரெம் ஷாலோம் (Kerem Shalom) கடவையின் பாலஸ்தீனப் பக்கத்தை லொறிகள் அடைந்த போதிலும், இதுவரை எந்த உதவியும் விநியோகிக்கப்படவில்லை என்று ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, காசாவில் இஸ்ரேலின் நியாயப்படுத்த முடியாத இராணுவ விரிவாக்கம் குறித்து வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக இங்கிலாந்து எச்சரித்துள்ளது.
பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் காசாவின் நிலைமையை சகித்துக் கொள்ள முடியாது என்று விவரித்தார்.
இதற்கிடையில், காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேலுடனான அதன் வர்த்தக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் என்று அதன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறினார்.
இதனிடையே, காசாவின் நீண்டகால மனிதாபிமான நெருக்கடியைச் சமாளிக்க ஒரு நாளைக்கு 600 லொறிகள் அடங்கிய உணவு, அத்தியாவசியப் பொருட்கள் தேவை என்று ஐ.நா. அமைப்புகள் மதிப்பிடுகின்றன.
முன்னதாக, ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் பிபிசி செய்திச் சேவையிடம், இஸ்ரேல் உடனடியாக உதவியை அனுமதிக்காவிட்டால் காசாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறக்க நேரிடும் என்று கூறினார்.
2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஆறு முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகளிடையே 14,100 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
அதேநேரம், கடந்த 11 வாரங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவுகளால் 57 குழந்தைகள் இறந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது.
இந்த நிலையில், இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், காசாவிற்குள் “அடிப்படை அளவு உணவு” நுழைய டெல் அவிவ் ஞாயிற்றுக்கிழமை (18) ஒப்புக்கொண்டது.
செவ்வாயன்று அமெரிக்க வெளிவிகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ, காசாவிற்கு சில உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலின் முடிவை வரவேற்றார்.
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா தலைவர்கள் திங்களன்று இஸ்ரேலிய அரசாங்கத்தை அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் உடனடியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
இன்றைய அறிவிப்பின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து பல முக்கிய இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் குடியேறிகளுடன் தொடர்புடைய குழுக்கள் மீதும் தடைகளை விதித்தது.
2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் ஒரு இராணுவ பிரச்சாரத்தைத் தொடங்கியது.
இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் காசாவில் குறைந்தது 53,475 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் இஸ்ரேலிய தாக்குதல் மீண்டும் தொடங்கியதிலிருந்து 3,340 பேர் கொல்லப்பட்டதாக பிரதேச சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.