உக்ரேன் மீது ரஷ்யப் படையினர் நடத்திய வான் தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் புடின் ‘முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
உக்ரேன் தலைநகா் கீவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்றைய தினம் தெரிவித்தனா்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரேன் நாட்டை குறிவைத்து 298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள் என மொத்தம் 367 ஆயுதங்கள் மூலம் மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்னாத் தெரிவித்தாா்.
இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ட்ரம்ப்” புடினின் செயற்பாடுகள் கவலை அளிக்கின்றன எனவும், புடினுக்கும் தனக்கு நல்ல உறவு காணப்பட்டது எனவும், ஆனால் அவருக்கு தற்போது ஏதோ நடந்துள்ளது எனவும் அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் எனவும்” விமர்சித்துள்ளார்.
அத்துடன் புடின் தேவையில்லாமல் பலரைக் கொன்று வருகின்றார் எனவும், எந்த காரணமும் இல்லாமல் உக்ரேனில் உள்ள பல பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன” எனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேசமயம்”உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியையும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப கருத்துத் தெரிவிக்கையில் ”செலென்ஸ்கியின் பேச்சு அவருடைய நாட்டுக்கு நன்மை செய்யவில்லை எனவும், அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது எனவும், இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன எனவும் அவர் இவ்வாறு பேசுவதை நிறுத்த வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.