பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது.
அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று முன்தினம் (20) பாராளுமன்றத்தில் குழு கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23ஆம் திகதி பாராளுமன்ற அவைக் குழுவு எடுத்த தீர்மானத்தின்படி, பாராளுமன்ற பணிக்குழாமினருக்கான உணவு விலைகளை நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் 4,000 ரூபாவாகவும் , நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் 2,500 ரூபாவாகவும் இம் மாதம் முதலாம் திகதி முதல் வசூலிக்க பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்தது.
இருப்பினும், இந்த விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற பணிக்குழாமினரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்த குழுவால் நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டு, அதன்படி, நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் 3000 ரூபாவாகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் 2000 ரூபாவாகவும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்த புதிய விலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இதேவேளை, கடந்த மே 23 ஆம் திகதி குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, பாராளுமன்ற பொது உணவகத்தில் உணவுகளை கொள்வனவு செய்யும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளாலர்களுக்கும் தற்போது வசூலிக்கப்படும் உணவுக் கட்டணங்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை இல்லத்தின் ஒரு பகுதியை பாராளுமன்ற ஊழியர்களுக்காக ஒதுக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுவரை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இந்த விடுமுறை இல்லத்தை முன்பதிவு செய்ய முடிந்ததுடன், சபாநாயகரின் அறிவுறுத்தலின்படி, இந்தக் கட்டிடத்தில் உள்ள ஒரு பகுதியை எதிர்காலத்தில் பாராளுமன்ற ஊழியர்களுக்குக்கும் ஒதுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதுப்பித்தல் பணிகள் குறித்தும், பாராளுமன்ற அவைக் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு பகலில் தற்காலிக தங்குமிடத்திற்கான இடத்தை தயார் செய்வதற்கான அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.