தம்புள்ளையில் நேற்று (14) நடைபெற்ற இரண்டாவது டி:20 போட்டியில் பங்களாதேஷ் அணியானது 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலமாக இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரினை லிட்டன் தாஸ் தலைமையிலான அணியி 1:1 என்ற கணக்கில் சமன் செய்தது.
கண்டி, பல்லேகலயில் நடந்த முதல் போட்டியின் தோல்வியின் பின்னர், அணியில் சில மாற்றங்களை மேற்கொண்ட பங்களாதேஷ் அணியானது நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது.
போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த அவர்கள், 177 ஓட்டங்களை எடுத்தனர்.
பின்னர் இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையை வெறும் 94 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தனர்.
இது பங்களாதேஷுக்கு எதிரான ஒரு டி:20 போட்டியில் இலங்கை அணி பெற்றிக் கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை ஆகும்.
அதேநேரம், இது இலங்கை அணி சொந்த மண்ணில் பதிவு செய்த மிகக் குறைந்த டி:20 ஓட்ட எண்ணிக்கையாகவும் அமைந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியும், முதல் இரண்டு ஓவர்களுக்குள் இரு தொடக்க வீரர்களையும் இழந்தது.
எனினும், அணித் தலைவர் லிட்டன் தாஸ், தனது 12 ஆவது டி:20 அரைசதத்துடன் இன்னிங்ஸை நங்கூரமிட்டார் – 50 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 76 ஓட்டங்களை எடுத்தார்.
லிட்டன் தாஸுடன் கைகோர்த்தாடிய டோஹித் ஹிரிடோய் 25 பந்துகளில் 31 ஓட்டங்களை எடுத்தார்.
இவர்கள் இருவரும் இணைப்பாட்டமாக 69 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் ஹிரிடோய் பினுர பெர்னாண்டோவின் பந்து வீச்சில் குசல் ஜனித் பெரேராவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த மெஹிடி ஹசன் மிராஸும் ஒரு ஓட்டத்துடன் விரைவில் பெவிலின் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய ஷமிம் ஹொசைனுடன் லிட்டன் தாஸ் கைகோர்த்தட இலங்கை அணிக்கு பங்களாதேஷின் விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது சிம்ம சொப்பனமாக போனது.
இவர்கள் இருவரும் 5 ஆவது விக்கெட்டுக்காக 39 பந்துகளில் இணைப்பாட்டமாக 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
ஷமிம் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 48 ஓட்டங்களை எடுத்து, இன்னிங்ஸுக்கு மிகவும் தேவையான வேகத்தை அளித்தார்.
இறுதியாக பங்களாதேஷ் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை அணிக்கு ஆறுதல் தரும் விடயமாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோ 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வலுவான இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானால், இன்னிங்ஸில் ஒரு போதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
குறிப்பாக நல்ல செயல்திறனில் இருந்த இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டீஸ் ஒரு சிங்கிள் எடுப்பதற்காக முயற்சித்து ரன் அவுட் ஆனதைத் தொடர்ந்து, அணியின் சரிவு ஏற்பட்டது.
பவர் பிளேக்குள் இலங்கை நான்கு விக்கெட்டுக்கு 30 ஓட்டங்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.
இறுதியாக விக்கெட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக விழ இறுதியாக அவர்களது இன்னிங்ஸ் வெறும் 15.2 ஓவர்களில் நிறைவுக்கு வந்தது.
இலங்கை அணியின் இரண்டு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை எட்டினர்.
அதன்படி, பத்தும் நிஸ்ஸங்க 32 ஓட்டங்களையும், தசூன் சானக்க 20 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் சார்பில் சிறப்பாக செயல்பட்ட ஷமிம் ஹொசைன் 18 ஓட்டங்களை வழங்கி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவரது பந்து வீச்சும் போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது.
லிட்டன் தாஸ் தனது தீர்க்கமான ஆட்டத்திற்காக ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மூன்றாவதும், தீர்க்கமுமான டி:20 போட்டி எதிர்வரும் புதன்கிழமை (16) கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















