பல நிதி நிறுவனங்களின் அலுவலகங்களைக் கொண்ட நியோர்க் நகரில் அமைந்துள்ள மிட் டவுன் மன்ஹாட்டன் வானளாவிய கட்டிடத்திற்குள் திங்கட்கிழமை (28) துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு குறித்த விவரங்களை பொலிஸார் உடனடியாக வெளியிடவில்லை.
ஆனால், இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நான்கு பேரில் ஒருவர் காவல்துறை அதிகாரி என்றும், சுட்டுக் கொல்லப்பட்டதாக அறியப்படும் ஏனைய மூன்று பேரும் பொதுமக்கள் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், நியூயார்க் நகர காவல் துறை தனது சமூக ஊடக தளமான எக்ஸ் பதிவில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் இறந்து விட்டதாகக் கூறியது.
நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், துப்பாக்கிச் சூட்டினால் பலர் காயமடைந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட அமுலாக்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூயோர்க் போஸ்ட் செய்திச் சேவையானது,
குண்டு துளைக்காத ஆடையை அணிந்திருந்த ஒரு துப்பாக்கிதாரி, AR-ரக துப்பாக்கியை ஏந்தியபடி, பார்க் அவென்யூ வானளாவிய கட்டிடத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், நியூயார்க் நகர காவல் துறை அதிகாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், பின்னர் தன்னைத்தானே அவர் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டது.
மேலும், ஆறு பேர் காயமடைந்ததாக நியூயோர்க் போஸ்ட் செய்திச் சேவை குறிப்பிட்டது.
அதேநேரம், சிஎன்என் செய்திச் சேவை, துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தவிர, பொலிஸ் அதிகாரி மற்றும் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
சிஎன்என், நியூயோர்க் போஸ்ட் மற்றும் என்பிசி செய்திச் சேவை உள்ளிட்ட பல அமெரிக்க செய்தி நிறுவனங்கள், சந்தேக நபர் லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயது நபர் என தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறியுள்ளன.
துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் துப்பாக்கியுடன் கட்டிடத்திற்குள் நடந்து செல்வதைக் காட்டும் புகைப்படத்தை, பல முக்கிய செய்தி ஊடகங்கள் வெளியிட்டன.

சந்தேக நபரின் பின்னணி குறித்த முதற்கட்ட விசாரணையில் குறிப்பிடத்தக்க குற்றவியல் வழக்குகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி அறிக்கை மேலும் கூறியது.
நியோர்க் நகரின் 345 பார்க் அவென்யூவில் உள்ள வானளாவிய கட்டிடத்தில் பிளாக்ஸ்டோன் மற்றும் பன்னாட்டு தொழில்முறை சேவை வலையமைப்பான கேபிஎம்ஜி உள்ளிட்ட பல நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன.
அதனுடன் அமெரிக்க தேசிய கால்பந்து லீக் தலைமையகமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.















