முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பிரதிவாதி கோரிய பல ஆவணங்களை திறந்த நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் ஒப்படைத்தது.
இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் வழக்கு தொடர்பில் தேவைப்படும் கூடுதல் ஆவணங்கள் இருப்பின் அதனை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு நீதிமன்றம் பிரதிவாதிக்கு உத்தரவிட்டுள்ளது.
அதை அடுத்து வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி , அவரது மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, கடந்த 2020 ஓகஸ்ட் மாதம் 13 முதல் 2024 ஜூன் 24 ஆம் திகதி வரை வெகுஜன ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களில் பணியாற்றியபோது, 97 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















